தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்திய நிலையில், எதிர்பாராத திருப்பமாக இந்த சம்பவத்திற்கு காரணமாக குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் பெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்திற்கு, குற்றவாளிகள் முகமது (26), ஜோலு சிவா (20), ஜோலு நவீன் (20) மற்றும் சிந்தகுன்டா சேனகேவலு (20) ஆகிய 4 பேரும் இன்று அதிகாலை 3 மணி அளவில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.
அப்போது, அதில் ஒருவர் தப்பித்துச்செல்ல மற்றவர்களுக்கு கண்காட்டியதாகவும், உடனடியாக அவர்கள் 4 பேரும் போலீசாரை தாக்கிவிட்டு அவர்களின் ஆயுதங்களை எடுத்து தப்பிச்செல்ல முயன்றதாகவும் அதனால், அவர்களை சுட்டுக்கொன்றதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.